×

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?

சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா?

– அயன்புரம், த.சத்தியநாராயணன்.

வீட்டில் வைத்து வழிபடலாம். ஆனால், அளவில் சிறியதாக இருக்க வேண்டும். லிங்கத்தின் திருவுருவம் நம் கைக்குள் அடங்கும் அளவிற்கு சிறியதாக இருந்தால் நல்லது. அதாவது லிங்கத்தை உள்ளங்கைக்குள் வைத்து விரல்களை மூடினால் வெளியே தெரியக்கூடாது. தினந்தோறும் அபிஷேகம் செய்ய வேண்டும். நம்மால் இயன்ற நைவேத்தியத்தையும் தவறாமல் செய்ய வேண்டும். ஓரிரு நாட்கள் ஊரில் இல்லை எனும் பட்சத்தில் ஒரு சொம்பில் சுத்தமான நீர் நிரப்பி வைத்துவிட்டுச் செல்லலாம்.

அஷ்டதிக் கஜங்கள் என்கிறார்களே, அப்படி என்றால் எட்டுத் திசையில் இருக்கும் யானைகள் என்றுதானே பொருள்? அவற்றின் பெயர்கள் என்ன?

– அருந்தாச்செல்வி, திருமங்கலம்.

உங்களது யூகம் சரியே. இந்திரனின் வாகனம் ஆன ஐராவதம் உள்ளிட்ட எட்டு யானைகளுக்கு அஷ்டதிக் கஜங்கள் என்று பெயர். ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீகம் என்பவை அஷ்டதிக் கஜங்கள் ஆகும். இந்த எட்டு யானைகளுக்கு உரிய பெண் யானைகள் முறையே அப்ரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்பரபர்ணி, சுபதந்தி, அங்கனை, அஞ்சநாவதி ஆகியவை. வேதமந்திரங்களுக்கு இடையே ஆங்காங்கே இந்தப் பெயர்கள் இடம்பெற்றிருப்பதைக் காண இயலும்.

சாதத்தை எடுக்க, காகம் வராவிட்டால் கிணற்றில் அதனைப் போடலாமா?

– வாணிரமேஷ், சிதம்பரம்.

கிணற்றில் மீன்கள் இருந்தால் போடலாம். ஜீவராசிகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். மீன்கள் இல்லாத கிணற்றில் போடுவதைவிட அந்த சாதத்தை தெரு நாய்களுக்கு வைக்கலாம். சிராத்தம் செய்த பின் காகத்திற்கு வைக்கும் பிண்டத்திற்கு இந்த விதி பொருந்தாது. அவ்வாறு சிராத்தம் செய்த பின் வைத்த பிண்டத்தை காகம் எடுக்க வராவிட்டால், அதனை ஆறு, குளம், நீர் அல்லது கடல் முதலான மீன்கள் வாழுகின்ற தீர்த்தங்களில் கரைப்பதே நல்லது.

எனது மகனுக்கு சனி தசை நடப்பதால் கோயிலில் எள்விளக்கு ஏற்றச் சொல்லியிருக்கிறார்கள். பணியின் நிமித்தம் அவனால் முடியவில்லை எனில் நான் விளக்கு ஏற்றலாமா?

– திலகவதி, சேலம்.

நீங்கள் உணவு உட்கொண்டால் உங்கள் மகனின் பசி தீர்ந்து விடுமா? நீங்கள் மருந்து சாப்பிட்டால் அவருடைய உடல்நிலை ஆரோக்கியம் பெறுமா? யாருக்கு பசி எடுக்கிறதோ அவர்தான் உணவு உட்கொள்ள வேண்டும். யாருக்கு உடல்நிலை சரியில்லையோ அவர்தான் மருந்து சாப்பிட வேண்டும். விவரம் தெரியாத பச்சிளம் குழந்தையின் நலனுக்காக வேண்டுமானால் தாயார் பரிகாரம் செய்ய இயலும். வேலைக்குச் செல்லும் வயதில் இருக்கும் மகனுக்காக நீங்கள் விளக்கேற்றி வழிபடுவதைவிட அவரே நேரடி யாக ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவதே நல்லது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் உடனடியாக பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.

பதிபக்தி, குருபக்தி இரண்டில் அதிக பலன் தருவது எது?

– விநாயகராமன், திசையன்விளை.

பதிபக்தி என்பது பெண்கள் கணவரிடம் கொண்டிருப்பது. குருபக்தி என்பது மனிதர்கள் தங்களை வழிகாட்டும் குருமார்களிடம் செலுத்துவது. குரு மூலமாகத்தான் வாழ்க்கைப் பயணத்தை கடக்க இயலும். எல்லோருடைய வாழ்விலும் குரு என்பவர் நிச்சயமாக ஒருவர் இருப்பார். யாரேனும் ஒருவரைப் பின்பற்றித்தான் எல்லோருமே தங்களுடைய வாழ்வினில் குறுக்கே வரும் இடர்களைக் கடக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை அவர்களது கணவன்மார்கள்தான் அவர்களுக்கு உரிய குரு. திருமணம் ஆகும் வரை தந்தை குருவாக இருந்து வழிகாட்டுகிறார். திருமணத்திற்குப் பிறகு கணவன்மார்கள் குருவாக இருந்து அவர்களை உடன் அழைத்துச் செல்கிறார்கள். திருமணமான பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு கணவனே குரு என்பதால் பதிபக்தி என்பதும் குருபக்தி என்பதும் ஒன்றுதான். ஆக, பதிபக்தி என்பதும் குருபக்திக்குள் உள்ளடங்கிவிடுவதால் குருபக்தி என்பதே அதிக பலனைத் தரக்கூடியது என்று தீர்மானிக்க இயலும்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? அல்லது ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க வேண்டுமா? appeared first on Dinakaran.

Tags : Shiva ,Ayanpuram ,T. Sathyanarayan ,Shiv Lingam ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு